ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கமராக்கள் அகற்றப்பட்டன என அப்பல்லோ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
அதேநேரம், ஜெயலலிதாவுக்கு தனிமை தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கமராக்கள் அகற்றபட்டதாக அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ஜெயலலிதா உயிரிழப்பு தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் நிறைய அரசியல் தலைவர்களை விசாரிக்காமல், தங்கள் மருத்துவர்களை மட்டும் தொடர்ந்து விசாரணைக்கு அழைப்பது ஒருதலைப்பட்சமானது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆதலால், ஆணையத்தின் முன்பாக மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை எனவும் அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.
ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை, அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான விபரங்களை எந்த அடிப்படையில் தெரிவிப்பது என அப்பல்லோ தரப்பு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கிறோம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அப்பல்லோ தெரிவித்திருக்கிறது.
மேலும், அரசு கூறியதால்தான் சிசிடிவி கமராக்கள் மருத்துவமனையில் இருந்து அகற்றியதாக ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் குறித்த வழக்கில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறது.
அதிகார வரம்பை மீறி ஆறுமுகசாமி ஆணையம் நடந்து கொள்கிறது, நிறைய உத்தரவுகளை போடுகிறார்கள் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து ஆஜராக விலக்கு கோரிய அப்பல்லோவின் மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (26) நடைபெற்ற போதே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.