July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்’ ; தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், ‘என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றும் ‘இந்த கௌரவத்தை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில்,விருதை பெற்ற ரஜினிகாந்த் அங்கு பேசும்போது,

‘எனக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி என்றும் ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில்,தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.

 

அதேபோல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாளாகும். இந்தியத் திரையுலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களில் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.