இந்தியாவின் இமயமலை மாநிலமான உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சுற்றுலாத்தலமான நைனிடால் பகுதி மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.அங்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், மலையேற்ற குழுவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,300 க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம்,சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.
மழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுடன் நகரை இணைக்கும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (21) ஆய்வு செய்கிறார்.