July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16 முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது.

எனவே, இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் காமாலேயா ரிசேர்ச் மையம் கண்டுபிடித்த ஸ்புட்னிக் , மொடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், ஜடைல் கேடில்லா மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

அரசு தரப்பில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி, இந்தியா வரலாறு படைத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார் .

மேலும், நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டு முயற்சியின், வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம், வாழ்த்துகள் இந்தியா என பிரதமர் குறிப்பிட்டுள்ளார் .

அத்தோடு, 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம், மருத்துவர்கள், செவிலியர்கள், இந்த சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி.

அதேபோல், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துகள் இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையால் இது சாத்தியமானது என்று பதிவிட்டுள்ளார்.

முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 30 வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாவது டோஸை தவறவிட்டவர்களை கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.