January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்; சசிகலா மீது ஜெயக்குமார் புகார்

சசிகலா மீது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி குழப்பம் விளைவிக்கிறார். அவர் மீது ஐபிசி 419 இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

அதிமுக கட்சி கொடியே சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என புகார் மனுவில் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் கட்சி கொடியை மீண்டும் சசிகலா பயன்படுத்தி கலகத்தை ஏற்படுத்த முயல்வதாக சாடியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளித்திருக்கிறார்.

காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது என தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா என்று கூறி, சட்டத்தையும் சசிகலா கையில் எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பேசி பொது வெளியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் எனக் கூறியுள்ள ஜெயக்குமார், அவர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வில்லை என குற்றஞ் சாட்டியிருக்கிறார்.

அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

திமுகவும் சசிகலாவும் இணைந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் சசிகலாவிற்கு திமுக உதவுகிறது எனவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.