
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தனது கடிதத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.