November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

FilePhoto

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புப் பொலிஸார் சோதனை நடாத்துகின்றனர்.

அதற்கமைய விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள் என உறவினர்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி, குடும்பத்தினருக்கு சொந்தமான மேட்டுசாலையில் உள்ள கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் புதுக்கோட்டை, ஆலங்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் வீடுகள் என மாவட்டத்தில் 23 இற்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

மேலும், தமிழகத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக இருக்கு 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, கொரோனா பரவல் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்கள் வங்கியதில் பல்வேறு மோசடி நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன .

இதுதவிரசட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விபரங்கள் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, மத்திய புலனாய்வு பிரிவினர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், கல்குவாரிகளில் சோதனை நடத்தியிருந்தனர்.

அதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதோடு, கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட பலநூறு மடங்கு அதிகமாக கல் வெட்டி எடுத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் மீண்டும் தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகள் நிறைவடைந்த பின்னரே, யார் யார் வீட்டில் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டன போன்ற விவரங்கள் தெரியவரும்.