July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவில் கனமழை: பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வருடா வருடம் பாரிய அளவிலான இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கேரளா மாவட்டம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதுடன், இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கொக்கையாறு, பூவஞ்சி கிராம பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகளில் வசித்த 22 பேர் மண்ணுக்குள் புதையுண்டதில் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் கனமழை, பேரிடரை எதிர்கொள்ள அம்மாநில நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும், தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,முக்கிய சாலைகள், வீடுகள் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகள் பெரும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் கோட்டயம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

பேரிடர் மீட்புப் படையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருவதுடன், கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், கேரளாவில் கன மழையால் 22 முக்கிய அருவிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

கோட்டயம் உட்பட மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவனந்தபுரம்,பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா , மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கன மழை, வெள்ளப் பெருக்கால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதேவேளை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.