November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர்”: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர், அவரைத் தவிர யாரும் பொதுச்செயலாளராக முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கல்வெட்டில் பெயர் போட்டால் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிவிட முடியாது எனவும் ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிகமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சசிகலா கொடியேற்றியது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறியுள்ளது, இன்று சசிகலா செய்தது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிடமுடியாது, சசிகலா என்ன தியாகம் செய்தார் தியாகத்தலைவி என பெயர் சூட்டிக்கொள்ள? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, பொன்விழா ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை எனவும் சசிகலாவால் தான் 1996ஆம் ஆண்டு அதிமுக தோல்வியடைந்தது என ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல, நான் தான் ‘புரட்சித் தாய்’ என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.