
அதிமுகவின் 50 ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்திலிருந்து மெரினா கடற்கரைக்குச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடிய கட்சியினர், அதிமுகவின் பொன்விழா ஆண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டனர்.
அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதிமுக தலைமை அலுவலகம் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.