ஆஸ்கர் விருது வாங்கும் அளவிற்கு நடித்தாலும், சசிகலாவை மக்கள் நம்பமாட்டார்கள் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா இன்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், அது தொடர்பில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, நாளை அதிமுகவின் பொன் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று வேண்டுமென்றே கட்சி கொடியை பயன்படுத்திய குழப்பம் விளைவிக்க சசிகலா முயல்கிறார் என அவர் சாடியுள்ளார்.
மேலும், யானை பலம் பொருந்திய அதிமுகவை கொசு தாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுவதா? எனவும், சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் எனவும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் பில்டப் செயற்கையானதாக இருக்கிறது, இயற்கையாக இல்லை, ஒரு நாளுக்கு இலட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர், அந்த இலட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது, சசிகலா நினைப்பது நடக்கப்போவதில்லை எனவும் யானை பலம் கொண்டது அதிமுக எனவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை, எனக் கூறியுள்ள ஜெயக்குமார், அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு என விமர்சித்துள்ளார்.