தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
அதிமுகவின் 50 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை, 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக கொடி பொருத்திய காரில் ஆதரவாளர்களின் வாகன அணிவகுப்புடன் பலத்த பாதுகாப்புடன் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு சென்றுள்ளார் சசிகலா.
சிறைக்கு செல்லும் முன், ஜெயலலிதா சமாதியில் சபதமொன்றை எடுத்திருந்த சசிகலா, கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரம் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் அதிமுக தொண்டர்கள் உடன் தொலைபேசியில் சசிகலா உரையாடிய ஆடியோ பதிவு வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று சசிகலா தனது தோழியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சசிகலா முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவிடம் சென்று அதன் பின்னர் போரூர் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தியுள்ளார்.