சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்கள் .
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.வி. பாட்டீல் முன்பு நடைபெற்றுள்ளது.
.
அப்போது ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், . ஆர்யன் கான் கடந்த சில வருடங்களாக போதைப் பொருட்களை அடிக்கடி வாங்கி பயன்படுத்தி வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமும் அவர் தொடர்பில் இருந்துள்ளார் என அவரது வட்ஸ் அப் தகவல்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக அனில் சிங் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், சர்வதேச போதைப் பொருள் கும்பலுடனும் ஆர்யன் கானுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து விசாரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை நாடியுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
.ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை விதிகளின் படி, கைதி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4,500 மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நடிகர் ஷாருக்கான் இந்தத் தொகையை ஆர்யன் கானுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது .