தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன்விழா எதிர்வரும் 17ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் 16 ஆம் திகதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா சார்பில் முன்னாள் அதிமுக நிர்வாகியான வைத்தியநாதன் என்பவர் பெயரில் பாதுகாப்பு கோரி இம்மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகியுள்ள சசிகலா தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனாலும் சசிகலா அவ்வப்போது தொலைபேசி வாயிலாக கட்சி தொண்டர்களுடன் பேசி வருவது சமீபகாலங்களில் வைரலாகியது.
இந்நிலையில் திடீரென நினைவிடங்களுக்குச் செல்லும் சசிகலாவின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.