
இந்தியாவில் பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிராமத்தில், உத்ரா என்ற 25 வயது பெண் கடந்த ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் பாம்பு கடித்து மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
எனினும் வரதட்சணை கேட்டு உத்ராவை அவரின் கணவர் சூரஜ் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் உத்ராவை கொலை செய்திருக்கலாம் எனவும் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சூரஜ் குமார் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (13) சூரஜ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இந்த வழக்கில், சூரஜ் குமாருக்கு பாம்புகளை வாங்க உதவிய நபரை பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட “ஒப்புதல் வாக்குமூலம்” குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க உதவியது.
வழக்கறிஞர்கள் இது “மிகவும் அரிதான வழக்கு ” என்று வாதிட்டனர். அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினர்.
சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 500,000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய உத்ராவின் பெற்றோர், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லவிருப்பதாக தெரிவித்தனர்.