January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’

தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் அமைதி நிலவி, அவை செழிப்படைய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் ,ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கை அமைப்பின் சி.ஐ.சி.ஏ-சைகா, 6- ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஒரு நாட்டின் இறையாண்மையை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும்.மிகப்பெரிய எதிரியான தீவிரவாதத்தை உலக நாடுகள் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது தீவிரவாதத்தின் மற்றொரு வடிவம் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஆகவே சர்வதேச தீவிரவாதம் என்ற அரக்கனுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தீவிரவாத பிரச்சினையை தீர்க்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, அதனை உலகில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என ‍இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஆப்கானிஸ்தான் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்த சைகா அமைப்பு உதவிகளை வழங்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.