November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தரப் பிரதேச வன்முறை: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைதானார்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோவில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 3 ஆம் திகதி லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்ட மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தடன் தொடர்புடைய கார் தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு மனு அனுப்பப்பட்டது.

எனினும் அவர் ஆஜராகாத நிலையில், மீண்டும் மனு அனுப்பப்பட்டது. இதனையடுத்து லக்கிம்பூர் காவல் நிலையம் சென்ற ஆசிஷ் மிஸ்ராவிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்பவத்தன்று அந்த பகுதியில் தான் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை ஆசிஷ் மிஸ்ரா கையளித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், விசாரணைக்குப் பிறகு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் லக்கிம்பூர் படுகொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவத்ஸ்வா தலைமையிலான ஒரு நபர் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.