போதைப் பொருள் வழக்கில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கியதால், ஷாருக்கானுக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இந்நிலையில், மகன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றுதான் பைஜூஸ் நிறுவனம். இதனிடையே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் அந்நிறுவனம் ஷாருக்கான் நடித்திருக்கும் விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளது .
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான பைஜூஸ் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் விளம்பரத்தால் மட்டும் ஷாருக்கானுக்கு ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வருமானமும் வருகிறது.
இதேவேளை, மகன் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் ஷாருக்கானுடன் தொடர்பு கொள்ள, பைஜூஸ் நிறுவனம் விரும்பவில்லை எனவும், அதனால் ஷாருக்கான் நடித்துள்ள விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தவிர, துபாய் சுற்றுலா ,ஹூண்டாய், எல்.ஜி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக நடிகர் ஷாருக்கான் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.