‘ எனது மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை, அது என்னோடு போகட்டும்’ என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதேநரம், அரசியல் தன் வாழ்க்கையை அழித்துள்ளதாக கூறியுள்ள வைகோ, அதுபோல் தனது மகனும் அழிந்து விடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது, தனது 56 ஆண்டுகால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன் எனவும் 28 ஆண்டுகாலம் இலட்சக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன் எனவும் வைகோ கூறியுள்ளார்.
மேலும், ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், சிறை வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் திகதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும் என்பதையும் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவின் மகன் துரை வையாபுரி, தான் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, ம.தி.மு.க. வின் இளைஞரணி தலைவராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி அறிவிக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.