July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

68 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் டாடா வசமானது ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்த நிலையில், அதனை விற்பனை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாடா குழுமத்திற்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டுள்ளது.

எனினும், விற்பனை ஒப்பந்தப்படி “5 ஆண்டுகளுக்கு ஏர் இந்தியாவின் இலச்சினையையோ, பிராண்டையோ வேறு யாருக்கும் டாடா வழங்க முடியாது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியருக்கு மட்டுமே இதனை விற்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1932 இல் டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 1953 இல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.

தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா மூலம் இந்திய அரசுக்கு ஒவ்வொரு நாளும் 200 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இதுவரை 70 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்  மொத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் வசமாவதை உணர்ச்சிபூர்வமாக கொண்டாடும் வகையில் ‘வெல்கம் பேக்’ என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், டாடா டிரஸ்டின் தலைவருமான ரத்தன் டாடா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.