திரிணாமுல் காங்கிரஸை தான் இந்தியர்கள தற்போது விரும்புவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் திரிணமூல் காங்கிரஸால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என இந்திய மக்கள் கனவு காண்பதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
‘டெல்லி அழைப்பு’ என்ற பெயரில் பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையொன்றிலேயே மம்தா பானர்ஜி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் தவறி விட்டதாகவும், காங்கிரஸால் பாரதிய ஜனதாவை 2 மக்களவை தேர்தலிலும் வீழ்த்த முடியாததால் தற்போது அந்த பொறுப்பை இந்திய மக்கள் தமது தோளில் சுமத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெற்ற அமோக வெற்றியால், தன் தலைமையிலான அரசின் மீது பிற மாநில மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மக்களின் விருப்பத்திற்கேற்ப பாரதிய ஜனதாவுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட தங்கள் கட்சி முன்வந்துள்ளதாகவும் எதிரணிக்கு தலைமை தாங்குவதில் தமக்கு விருப்பம் இல்லை என்று சூட்சுமமாக மம்தா பனர்ஜி கூறியுள்ளார் .
அதேநேரம் காங்கிரஸ் கட்சி தற்போதைய யதார்த்த சூழலை புரிந்துகொண்டு எதிரணியை வலிமையானதாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக மம்தா பனர்ஜி பேசப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிட மம்தா பானர்ஜி முனைந்திருப்பது வியூகங்கள் மூலம் தெரியவருகிறது.