November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில்: விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் போராட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரியங்கா காந்தியை சந்திக்க லக்னோ சென்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் பூபேஷ் பாகல், விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, ‘தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை’ என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு சென்றிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமல் பொலிஸாரால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் மீது சிஆர்பிசி 151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூருக்குச் செல்வேன் என்று அறிவித்த நிலையில் அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச அரசு சத்தீஸ்கர் முதல்வர் வந்த விமானத்தை லக்னோவில் தரையிறங்க அனுமதி அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

எனினும் உத்தர பிரதேச அரசின் உத்தரவை மீறி பூபேஷ் பாகல் லக்னோவுக்கு சென்றுள்ளார்.

பூபேஷ் பாகல் பிரியங்காவைச் சந்திக்க சித்தாபூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இன்று காலை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.