தமிழ்நாட்டின் காரைக்கால் மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அனுமதிக்குப் பின் காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் என்சிசி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி புதுவை என்சிசி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் கடல் சாகசப் பயணம் நடத்தப்படுகிறது.
என்சிசி மாணவர்கள் இன்று புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கி கடல் வழியாக 25 மாணவிகள் உட்பட 60 மாணவர்கள் காரைக்காலுக்குச் செல்கின்றனர். இந்தப் பயணத்தை ஆளுநர் தமிழிசை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதன்போது, இந்த நிகழ்வில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் சுற்றுலாவை வளர்க்க கடல் பயணம் மூலம் காரைக்காலுக்குச் செல்ல முன்னோட்டமாக இது அமையும் என கூறியுள்ளார்.
மேலும், புதுச்சேரியின் காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு ஏற்கனவே கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் அந்த கப்பல் போக்குவரத்து திடீரென இடை நிறுத்தப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இதுகுறித்து இலங்கை அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவுத்துறையில் சில அனுமதிகளைப் பெற்ற பின்னர், இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருக்கிறார்.