July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 700 பயணிகளுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தல்!

பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 700 பயணிகள் 10 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாகக் கூறி இந்தியர்கள் தமது நாட்டுக்குள் நுழைய பிரிட்டன், கனடா, போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனையடுத்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து இந்தியா ஏற்கெனவே அந்நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான இ-விசா வசதியைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் குடிமக்களுக்கான சட்ட திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்திய அரசின் புதிய விசா நிபந்தனைகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துள்ள 700 பயணிகளும் 10 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய விதிகளின்படி, அனைத்துப் பயணிகளும் கட்டாய பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றைக் கண்காணிக்க டெல்லி அரசின் குழு விமான நிலையத்தில் செயல்படுகிறது.

அதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கவும் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

பிரிட்டன் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிட்டன் செல்லும் பயணிகள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் ஆர்.டி-பிசி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.