நடுக்கடலில் வைத்து சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து தொடர்பாக பிரபல பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் மும்பையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் போதை விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கப்பலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கியுள்ளது.
குறித்த விருந்தில் நடிகர்கள், நடிகர்களின் மகன்கள், மொடலிங் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருந்து நிகழ்வில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கொக்கைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஆர்யன் கானின் கைத் தொலைப்பேசியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.