July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலக நாடுகள் காந்திய வழியில் இயங்க வேண்டும்’: ஐநா பொதுச் செயலாளர்

உலக நாடுகள் காந்திய வழியில் இயங்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் வழியில் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை உலகம் பின்பற்ற வேண்டும் எனவும் ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்த நாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதுடன் அகிம்சை வழியில் போராடிய காந்தியின் பிறந்த நாளை உலக நாடுகளும் கொண்டாடுகின்றன.

இதனையொட்டி, ஐநா பொதுச் செயலாளர் அன்தோனியோ,  காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சர்வதேச அகிம்சை தினமான இன்று காந்தியின் அமைதி வழியில் நடந்து எல்லோருக்கும் எதிர்காலத்தை உறுதி செய்வோம் என அவர் டுவிட்டர் பதிவிட்டு, வலியுறுத்தியுள்ளார்.

உலகில் பிரிவினையும், வெறுப்பும், மோதல்களும் மலிந்து கிடக்கிறது எனவும் ஆதலால், தற்போது நம்பிக்கை, சகிப்புதன்மை, அமைதி நிறைந்த புதிய காலத்தை வரவேற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளும் இன்று காந்தியடிகளுக்கு மரியாதை செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளும்- எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் காந்தியடிகளுக்கு மரியாதை செய்தனர்.