அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘ஷாகீன்’ புயல் இன்று தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவான ‘ஷாகீன்’ புயல், குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சபகார் துறைமுகத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் 4ஆம் திகதி வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, பிஹார், மேற்கு வங்கம், சிக்கிம், கர்நாடகா, குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் அக்டோபர் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குலாப் புயலில் எஞ்சியவைதான் தற்போது ‘ஷாகீன்’ புயலாக உருவெடுத்து இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரு புயலின் எச்சங்கள் புதிய புயலாக உருவெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் இதற்கான வாய்பை மறுக்க முடியாது என வானிலை ஆய்வு மைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கக் கடலில் உருவான ‘குலாப் புயல் , ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கரையைக் கடந்தது.
பிறகு வலுவிழந்த இந்த புயல், தெலங்கானா, மகாராஷ்டிரா வழியாக நகர்ந்து, குஜராத் கடற்பகுதியில் மையம் கொண்டது.
இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புதிய புயலாக உருவெடுத்ததுள்ளது. கத்தார் நாடு அளித்த பரிந்துரையின்படி இந்த புயலுக்கு ‘ஷாகீன்’ என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.