மேற்கு வங்க மாநிலத்தில் இன்றையதினம் இடைத்தேர்தல் இடம்பெறுகிறது. அதற்கமைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று (30) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிக்கிடையேயான போட்டி, பலத்த பாதுகாப்புக்கும் எதிர்பார்ப்புக்குமிடையே இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கு மட்டுமே நடைபெறும் இடைத் தேர்தலுக்காக 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், மேற்கு வங்கத்தில் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்கன்ஜ் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதுடன், மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் 97 வாக்குச் சாவடிகள் உட்பட மொத்தம் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மட்டும் 35 கம்பெனி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்து 200 மீற்றர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியுற்ற நிலையில், கட்சி வெற்றி பெற்றதால் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாக இருக்கிறது.
இதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தன் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
அதேபோல், இன்று ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், மேகாலயா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மிசோரம், நாகாலாந்து, அரியானா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 30 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இன்று பதிவாகும் வாக்குகள் எதிர்வரும் 3 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.