July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூலுக்கு விமான சேவையை தொடங்குமாறு இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

பயணிகள் விமான சேவையை தொடங்குமாறு தலிபான்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கன் தலைநகர் காபூல் நகருக்கு பயணிகள் விமான சேவையை தொடங்குமாறு இந்திய விமானக் கட்டுப்பாட்டு இயக்குநகரத்துக்கு தலிபான்கள் தலைமையிலான அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி காபூல் நகருக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது.இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் முதன் முதலாக ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசானது இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது.

இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை வாழ்த்து தெரிவிக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் புறப்படுவதற்கு முன் காபூல் விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக இந்தியா தெரிவித்திருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது காபூல் விமான நிலையம் கத்தார் அரசின் உதவியால் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான விமானப் போக்குவரத்து, புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதே இந்த கடிதத்தின் நோக்கம் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காபூலில் இருந்து தங்களின் எரினா ஆப்கன் ஏர்லைன்ஸ் அண்ட் கம் ஏர் விமானப் போக்குவரத்தை தொடங்க உள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மீண்டும் காபூல் நகருக்கு இந்தியா விமானப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருக்கிறது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அரசு தரப்பினர், காபூலுக்கு விமான போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம், வெளியுறவு துறை, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை இணைந்து முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.