January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாசடைந்த காற்று: உலகெங்கிலும் ஆண்டுக்கு 5 லட்சம் சிசுக்கள் மரணம்

அமெரிக்க சுகாதார நிறுவனம் ஒன்றின் ஆய்வின்படி, கடந்த ஆண்டில் மாசடைந்த காற்று காரணமாக உலகெங்கிலும் சுமார் அரை மில்லியன் சிசுக்கள் பிறந்து ஒரு மாதத்திலேயே உயிரிழந்துள்ளன.

இந்த எண்ணிக்கையில் 236,000 உயிரிழப்புகள் ஆபிரிக்காவில் சஹாரா பாலைவனத்திற்கு தெற்காகவுள்ள ( Sub-Saharan Africa) நாடுகளில் பதிவாகியுள்ளன.

மாசடைந்த காற்றை சுவாசித்ததன் காரணமாக, கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் 116,000 சிசுக்கள் பிறந்த முதல் மாதத்திலேயே உயிரிழந்துள்ளதாக காற்றின் தரம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை    சமையல் எரிபொருட்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களால் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாசடைந்துள்ள நச்சுக் காற்றை தாய்மார் கர்ப்பக் காலத்தில் சுவாசிப்பதால், பிறக்கும் குழந்தைகள் ஒரு மாதத்துக்குள் உயிரிழத்தல் மற்றும் குறைப் பிரசவம் ஏற்படுதல் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாகவும் ஆய்வை நடத்திய மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குழந்தைகளின் ஆரோக்கியம் ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்கும்  முக்கியமானதென்றும், வளி மாசு தெற்காசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டில் மட்டும் 1.67 மில்லியன் இந்தியர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய  நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.