பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழகத்தில் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கிய மனுக்கள் குப்பையில் போடப்பட்டுள்ளது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முன்னாள் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த மனுக்களுக்கு இதுவரை ஆளுநர் தரப்பிலோ மத்திய அரசு தரப்பிலோ உரிய பதில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பழைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு தற்போது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வந்துள்ள புதிய ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை என கூறியுள்ளது என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் புதிய ஆளுநரின் செயல்களை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும் எனவும் வைகோ கூறியுள்ளார்.