July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போயிங் விமான பாகங்களை தயாரிக்கும் தமிழகம்; முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

முதல் முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைச்சாத்திட்டுள்ளார்.

தமிழகத்தில் போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கமைய சேலத்தில் உள்ள ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ இந்த போயிங் விமான பாகங்களை தயாரிக்கவுள்ளது.

போயிங் விமான பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.சுந்தரம் பெற்றுக் கொண்டார்.

சேலத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்டகால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடையேயான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என சொல்லப்படுகிறது.

இந்த விமான பாகம் உற்பத்தி செயல் திட்டமானது முதல்வரின் தொலை நோக்கு பார்வையான ‘தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது’ (Made in Tamil Nadu) என்ற திட்டத்தின் கீழ் வரும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தால் தமிழகத்தில் வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு தமிழகத்தில் குறுந்தொழில் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் காலப்போக்கில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தரமான உயர்தர பாகங்களை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.