July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குலாப்’ புயலால் ஆந்திரா – ஒடிஷா மாநிலங்களில் பலத்த சேதம்

இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநிலங்களுக்கிடையே கரையை கடந்த ‘குலாப்’ புயலால் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன.

வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதி இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குலாப் புயல் காரணமாக கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களில் ஒருவர் கடலில் மூழ்கிப் பலியானதாகவும் மேலும் ஒரு சிலரை காணவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிஷா இடையே குலாப் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மற்றும் வடக்குப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

அதேநேரம், கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல பகுதிகள் மூழ்கியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலிங்கப்பட்டினத்தில் மட்டும் 61 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஸ்ரீகா குளத்தில் 1,400 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஆந்திராவின் வடக்குப் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்களும் சேதமடைந்திருப்பதால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கோபால்பூர் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து முறிந்து விழுந்துள்ளதுடன், கஞ்சம் மாவட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ‘குலாப்’ புயல்’ ஆந்திராவில் கரையை கடந்தாலும், கனமழை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.