July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்காள விரிகுடாவில் உருவான ‘குலாப்’ சூறாவளி இன்று கரையைக் கடக்கும்!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்துள்ளதுடன், அது இன்று மாலை இந்தியாவின் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளிக்கு ‘குலாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வானிலை அதிகாரிகள் இந்தப் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

இந்த சூறாவளி இன்று மாலை மேற்கு நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஷா பகுதிகளிடையே குறிப்பாக கோபால்பூர்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷா பகுதிகளுக்கு இந்திய வானிலை நிலையம் ஒரேஞ்ச் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது . மேலும் இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சூறாவளியால் இலங்கையில் பல இடங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதுடன், காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.