தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், தற்போது ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் என தனது கடந்த காலத்தை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையின் 76-வது அமர்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பாவிப்போருக்கு, அதுவே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா.வில் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது என குறிப்பிட்ட பிரதமர், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் சூழ்நிலையை பயன்படுத்தி எந்த ஒரு நாடும் தங்கள் சுயநலன்களுக்காக ஒரு கருவியாக அந்நாட்டை பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் .
துடிப்புள்ள ஜனநாயகம், பன்முகத்தன்மை தான் வலுவான இந்தியாவின் அடையாளம் என அவர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் உலகில் உள்ள அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும், இந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் எனவும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவு செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.
சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய கொவிட் -19 க்கான உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து பேசிய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.