ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பிரச்சினைகளுக்கு வழிகாட்டியாக தன்னை காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான், இந்தியாவின் அண்டை நாடுகளில் பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதுடன், ‘குவாட்’ மாநாட்டிலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிஸன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தத் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குவாட் மாநாட்டில் தலைவர்கள் மத்தியிலான சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து கண்காணிக்கப்படும் என பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று இந்தியா, அமெரிக்க தலைவர்கள் இடையிலான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.
மேலும், தீவிரவாத பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாகவும் அது குறித்து குவாட் அமைப்பின் நாடுகள் ஆய்வு செய்யும் எனவும் பாகிஸ்தான் சில நேரங்களில் தன்னை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு வழிகாட்டியாக காட்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், இந்தியா தனது அண்டை நாடுகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்போது, அங்கு பிரச்சனைகளை தூண்டிவிடும் வகையில் பாகிஸ்தான் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குதல், போக்குவரத்து உதவிகளை வழங்குதல் போன்றவற்றை தடுத்து தீவிரவாத செயல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் இந்தியா ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி எந்த நாடுகளையும் தீவிரவாதிகள் தாக்குவதற்கு முயற்சிக்க கூடாது எனவும் ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள், மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அந்த மக்களுக்கு தேவையான மனித நேய உதவிகளை வழங்க வேண்டுமெனவும் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.