July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விமானப் படைக்கு ‘சி-295’ விமானங்கள் கொள்முதல் ; ஏர்பஸ் – மத்திய அரசுக்கிடையே ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு சி.295 ரக விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய மொத்தமாக 56 விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இந்த விமானங்களை ‘ஏர்பஸ்’ நிறுவனத்திடம் இருந்து வாங்க போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 16 விமானங்களை ‘ஏர்பஸ்’ நிறுவனம் ஸ்பெயினில் உள்ள செவிலே எனுமிடத்தில் தயாரித்து வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் ஒப்பந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் ( ரத்தன் டாட்டாவின்) டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் (டி.ஏ.எஸ்.எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இந்தியாவில் ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் நிறுவனம் கூட்டாக தயாரித்து விமானங்களை அளிக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள ரத்தன் டாடா, இதனால் விமான தயாரிப்பு துறையில் இந்தியா புதிய இலக்குகளை எட்ட வழி வகுக்கும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் 15 ஆயிரம் திறன் மிகு பணியாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ-748 ரக விமானங்கள் காலாவதியானதால் அதன் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாவும் இதைத் தொடர்ந்து ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து சி-295 ரக விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அத்தோடு பன்முகத் தன்மை கொண்ட சி-295 விமானத்தில் விமானப் படையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படவுள்ளதுடன், இந்தியாவில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுவதால் விமான கட்டுமானத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

இதேவேளை, உள்நாட்டு விமான தயாரிப்பு திறனை சர்வதேச தரத்துக்கு இது உயர்த்தும் எனவும், விமான தயாரிப்பிலும் இந்தியா வளர்ச்சியடைய வழிவகுக்கும் என்பதுடன், நான்கு ஆண்டுகளில் 16 விமானங்கள் வழங்கப்படும் என ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.