தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை கொலை செய்ய முயன்றதாக விகேடி பாலன் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதற்கு சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1985 ம் ஆண்டு பெசன்ட்நகரில் அன்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றது.எனினும் இந்த குண்டுவெடிப்பில் எவரும் பாதிக்கப்படவில்லை.
வெடிகுண்டினை வைக்க முயன்றார் என விகேடி பாலன் என்பவர் உட்பட பலரிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சிலர் தலைமறைவாகிவிட்டனர்.ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் விகேடி பாலன் மாத்திரம் வழக்கை எதிர்கொண்டார்.
தனக்கு எதிரான வழக்கு 30 ஆண்டுகளாக இடம்பெறுவதாலும் பல ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாலும் அன்டன் பாலசிங்கம் இறந்துவிட்டதாலும் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என விகேடி பாலன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் உயிருடன் உள்ள ஏனைய சாட்சிகளை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.