November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்திய – அமெரிக்க உறவுகள் புதிய உயரத்தை எட்டும்”

அமெரிக்காவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கமலா ஹாரிஸை சந்திப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்துள்ளார்.

அப்போது இரு நாட்டுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடர்பில் ஆழமான உறவை வலுப்படுத்துவது குறித்து, கலந்துரையாடியதாகத் தெரிகிறது.

அதே போல், ஜப்பான் பிரதமர் யோஷிடே சூகாவையும் பிரதமர் மோடி சந்தித்து பிராந்திய உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி இருவரும் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருவரும் வெள்ளை மாளிகையில், நடந்தபடியே சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சந்திப்பின்போது சர்வதேச அளவிலான விவகாரங்கள், சுகாதாரம், கல்வி, பிராந்திய ரீதியிலான வளர்ச்சி, தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சி ஆகியவை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி செய்தியாளர்களிடையே கூறியுள்ளார்.

பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார் என்றும் மோடி, புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் கமலா ஹாரிஸ் விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை அடுத்து உரையாற்றிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல காரணமாக இந்தியா இருந்ததாக பாராட்டியுள்ளார்.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானபோது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பை உணர்ந்து அமெரிக்கா உதவியதாகவும், அதை தான் பெருமையாக கருதுவதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தினமும் இலட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தி வருவதையும் அவர் வரவேற்றுள்ளார். அதேபோல் தடுப்பூசி செலுத்தும் அதே நேரத்தில் பிற நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.