January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘7 பேர்‌ விடுதலையை நீட்‌ பிரச்சினை‌ போல தி.மு.க அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதா?’: பன்னீர் செல்வம் கேள்வி

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பிரச்சினையை, நீட் தேர்வு பிரச்சினை போல தி.மு.க அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதா? என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் விடுதலை செய்யப் பரிந்துரைத்ததுடன், 09-09-2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வர் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொது மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது என பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், ‘ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முன்னைய ஆளுநரால் குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில், புதிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது’ என்று சட்ட அமைச்சர் தெரிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், தி.மு.கவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இந்தியக் குடியரசு தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஏழு பேர் விடுதலை குறித்து தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.