பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இன்று காலை 10 மணியளவில் தமிழகத்திலுள்ள தமது கட்சி அலுவலகங்கள் முன்பாக கறுப்புக் கொடிகளை ஏந்தி, கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அதேபோல் கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பாகவும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் கடந்த ஆகஸ்டு 20 ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளை கண்டித்து போராட்டங்களை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அங்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி செப்டம்பர் 20 ஆம் திகதி தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிவிப்புக்கமைய தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.