‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப் படகை இந்திய கடலோர காவல் படை,வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட் முகமது ஷா.நவாஸ் மற்றும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் கடலோரப் படை வீரர்கள்,வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஹோவர் கிராப்ட் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டு ரோந்து சென்றனர்.
அப்போது மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப் படகை கைப்பற்ற கடலில் முயன்றனர்.ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த 4 பேர் தப்பி ஓடினர்.
இந்நிலையில்,பதிவெண் இல்லாத நாட்டுப்படகு மற்றும் அதிலிருந்து கடல் அட்டை மூடைகளை கைப்பற்றிய இந்திய கடலோரக் காவல் படை, மண்டபம் படை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
மூடைகளை பார்த்தபோது அதில் பதப்படுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் ஆயிரத்து 500 கிலோ இருந்தன.குறித்த கடல் அட்டை மூடைகளை மண்டபம் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
அதேபோல்,உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனப் பாதுகாப்பு படை,வன காவல் படை இணைந்து தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடமிருந்த 35 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.