November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு!

தமிழ் நாட்டின் 26 ஆவது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய ஆளுநருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இதேவேளை,தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் எனவும் பாரம்பரியம், பண்பாடு மிக்க தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைவதாகவும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன், அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநிலத்துக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார்.

இதனையடுத்து தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்த் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என். ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. 1976 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.