அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், அவருக்கு சொந்தமான 28 இடங்களில் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் 10 பேர் கொண்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக அ.தி.மு.க ஆட்சியில் தமிழக வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி.
சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், வீரமணியின் வீடு ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள திருமண மண்டபம், திருப்பத்தூரில் அவருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றிலும் சோதனை நடத்தப்படுகிறது.
அண்மையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,தற்போது அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.