July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட இஸ்லாமிய நாடுகளுக்கு உரிமை இல்லை’: ஐநாவில் இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு எந்தவித உரிமையும் இல்லை என இந்தியா எச்சரித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ஒ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும், பாகிஸ்தானும் இணைந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கு இந்திய தரப்பில் சரமாரியாக பதில் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் விவகாரம் குறித்து, இந்தியா தரப்பில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அதிகாரியான பவன் பாதே கடுமையான வார்த்தைகளால் பதிலளித்துள்ளார்.

இதன்போது, தோற்றுப் போனவர்களின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாகிஸ்தான் தோற்றுப்போன நாடு, மனித உரிமைகள் மிக மோசமான வகையில் மீறப்படும் நாடு எனவும் பவன் பாதே காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும், அவ்வாறான நாட்டின் பேச்சுகளை கேட்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓஐசி  எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பானது பாகிஸ்தானிடம் பணயக் கைதி போல் சிக்கி இருப்பதால் வேறுவழி இல்லாமல் அந்நாட்டுக்கு ஆதரவாக பேசும் நிலை ஏற்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சாடியிருக்கிறார்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து பயிற்சியும், ஆயுதமும் வழங்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகுக்கு தெரிந்த விடயம் என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி விமர்சித்துள்ளார்.

அதேநேரம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிடுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பது சரிதானா என்பது குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சிந்தித்து பார்க்க வேண்டும் என பவன் பாதே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் கேள்வி எழுப்பியதற்கு இந்திய அதிகாரி இவ்வாறு பதில் அளிப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.