January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் நடைபெறும் ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் இந்திய பிரதமர் மோடி

(FilePhoto)

அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கியதுடன் 2017ஆம்ஆண்டு இந்த அமைப்பில் , அவுஸ்திரேலியா இணைந்து கொண்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக குறித்த குவாட் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் காணொளி மூலம் மாநாட்டை நடத்தினர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, , அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பூசி, பருவ நிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் முறையாக குவாட் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு, அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ், பருவ நிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்துக்கு இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடானது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.