மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதே மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம் எனவும் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கொடநாடு வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள் இல்லை, மத மோதல்கள் , துப்பாக்கிச் சூடுகள், அராஜகங்கள் இல்லை என கூறியுள்ள ஸ்டாலின், இதுதான் தமது ஆட்சியின் மாபெரும் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அமைதியாக வாழ அடித்தளம் அமைத்துள்ளதாக கூறியுள்ளார்.