7.5 சதவீத உள் ஓதுக்கு போராட்டத்தில் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் தேவை என அறிவித்துள்ள தமிழக ஆளுநரை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க திராவிட முன்னேற்ற கழகம் தீர்மானித்துள்ளது.
மருத்துவபடிப்பில் அரச மருத்துவக்கல்லூரிகளில் அரசபள்ளி மாணவர்களுக்கு 7.5 வீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என செப்டம்பர் மாதம் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநரின் அங்கீகாரத்துக்காக தமிழக அரசு அனுப்பிவைத்துள்ள போதிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் இன்னமும் கைச்சாத்திடவில்லை.
ஆளுநரின் இந்த நடவடிக்கையால் மருத்துவபடிப்பிற்கான கலந்தாய்வுகள் தாமதமாகி வருகின்றன.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆளுநர், குறிப்பிட்ட சட்டம் குறித்து தீர்மானிப்பதற்கு தனக்கு ஒருமாதகால அவகாசம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதை தாமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துவதற்கு திமுக தீர்மானித்துள்ளது.
சனிக்கிழமை இந்த போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.