November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மம்தா பானர்ஜியை தோற்கடித்து வரலாறு படைக்க வேண்டும்’: பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால்

மம்தா பானர்ஜியை தோற்கடித்து தான் வரலாறு படைக்க வேண்டும் என மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பவானி பூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அங்கு நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட பா.ஜ.க சார்பில் பிரியங்கா திப்ரேவால் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா, மம்தா பானர்ஜியை தோற்கடித்து வரலாறு படைக்க மேற்குவங்க மக்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இது அநீதிக்கு எதிரான போராட்டம்.மேற்கு வங்க மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டம் எனவும் பவானிபூர் மக்களுக்கு மம்தா பானர்ஜியை தோற்கடிக்க ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் தேர்தலில் தோல்வியுற்றால், மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்று ஆறு மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும்.இல்லையென்றால் முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ. சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை இராஜினாமா செய்தார்.

முன்னதாக இதே பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.