பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளமைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
பீகார் மாநில தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை தேர்தலுக்கான லொலிபொப் என கருதும் உலகின் ஒரே கட்சி பாஜகாவாகத்தான் இருக்கமுடியும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி,
கொரோனாவுடன் பாஜகாவின் தீய மனோநிலைக்கு சிகிச்சை அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
2024 வரை தேர்தல் எதனையும் சந்திக்காத மாநிலங்களுக்கு பாஜகாவின் தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இலவச தடுப்பூசி பாஜகாவின் போலி வாக்குறுதிகளில் ஒன்று என தெரிவித்துள்ள ராகுல்காந்தி,
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என பாருங்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.